பயனற்ற செல்பேசிகளுக்குப் பின்னால்...

பயனற்ற செல்பேசிகளுக்குப் பின்னால்...

பழுதடைந்து எங்கோ ஒரு மூளையில் கிடத்தி வைக்கப்படிட்டிருக்கும் உங்கள் செல்பேசியை என்ன செய்வீர்கள்? இது மிகவும் எளிமையான கேள்வியே. இதற்கான விடை காண உங்கள் சிந்தனை விதவிதமாக சிதறியிருக்கும். இப்படிதான் செற்பமான சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது.

அண்மையில் நோக்கியா 'NOKIA' நிறுவனத்தினர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு 13 நாடுகளில் வாழும் 6500 ஆட்களிடம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் செல்பேசி பயன்படுத்துவோரிடையே 4 முக்கிய விடைகளை கண்டறிந்தார்கள்.

அவர்களில் 44 விழுக்காட்டினர் பழுதடைந்த செல்பேசியை வீட்டில் வைத்துக் கொள்வதாக கூறி இருக்கிறார்கள். 33 விழுக்காட்டினர் அதனை மற்றவரிடம் கொடுத்துவிடுவதாகவும், 16 விழுக்காட்டினர் விற்றுவிடுவதாகவும் 4 விழுக்காட்டினர் அதை தூக்கி எறிந்துவிடுவதாகவும் கூறி இருக்கிறார்கள்.

3 விழுக்காட்டினர் மட்டுமே செல்பேசியை மறுபயனீட்டுக்கு அனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 72 விழுக்காட்டினருக்கு செல்பேசி மறுபயனீடு என்பது தெரியாமலே இருந்திருக்கிறது. காகிதம் மற்றும் உலோக பொறுட்களின் மறுபயனீட்டைப் போல் செல்பேசி மறுபயனீடு பிரபலமில்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நாம் வாங்கும் மின்கருவிப் பொருட்கள் பழுதடையுமாயின் குறைந்தபட்சமாக அது ஏதோ ஒரு வகையில் பயனளிக்கக் கூடியதாகவே அமையும். பழுதடைந்த செல்பேசிக்கும் மதிப்பிருக்கும் என்பது பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. செல்பேசியில் இரும்பு, செம்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற உலோகப் பொருட்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம்மில் பலரும் அதை உணர்வதில்லை. பழுதடைந்தால் அவற்றை எறிந்து விடுகிறோம்.

செல்பேசி அளவில் சிறியது. அதை போலவே அதனுள் இருக்கும் உலோகங்களும் சிறிய அளவிலேயே இருக்கும். ஆகையால் பழுது போன செல்பேசிகளை மறுசுழற்சிக்கு அனுப்புவோமானால் அது பலருக்கும் நம்னை பயக்கும். முக்கியமாக இயற்கைக்கு நன்மை செய்வதாய் அமையும்.
3 பில்லியன் செல்பேசிகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுமானால் அதில் இருக்கும் 240 000 டன் கணிமங்களை சேமிக்க முடியும். அது போக தொலைபேசி போன்ற மின் சாதனத்தில் இருந்து வெளிபடும் நச்சு வளியையும் கட்டுபடுத்த முடியும். 3 பில்லியன் செல்பேசிகளில் வெளிபடும் நச்சு வளியானது 4 மில்லியன் ஊர்திகளில் வெளிபடும் நச்சு புகைக்கு சமமென தெரிவித்துள்ளது நோக்கியா நிறுவனம்.

கையடக்கப் பேசிகளை மறுசுழற்சி செய்யும் முதன்மை நிறுவணங்களில் ஒன்று சிங்கையில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவணத்தின் பெயர் Tess-Amm என்பதாகும். பல மின் கருவிகளையும் மறுசுழச்சி செய்து அதன் உள் அடக்கங்களை பிரித்து எடுத்து மறுபயனீட்டுக்கு அனுப்புவது இவர்களின் தலையாய செயல்.

ஒரு கிலோகிராம் தங்கம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 150000 முதல் 176000 வரையிலான கையடக்க பேசிகளை மறுசுழற்சி செய்தாக வேண்டும். மறுசுழற்சி நிறுவனங்கள் கையடக்க்கப் பேசியை தவிர்த்து வேறு பல தொழில்நுட்பக் கருவிகளையும் மறுசுழற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் கனிமங்களும் அதிகமாகவே இருக்கும்.

இன்றய நாட்களில் ஒருவருக்கு ஒரு கையடக்கப்பேசி என்பது போய் ஒருவருக்கு இரண்டு முன்று என்றாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் கையடக்கப் பேசிகளின் விலைகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொது மக்கள் பயன்படுத்தவும் ஏதுவாக அமைந்துவிட்டது.

மறுசுழற்சி பூமியில் குறைந்து வரும் கனிம கட்டுப்பாட்டிற்கு உதவியாய் அமையும் என்பது உறுதி. இயற்கையின் அழிவையும் பாதுக்காக வழி செய்கிறது. தங்க ஆலை வேலைகளின் போது காற்று, நிலம், நீர் என பலவும் மாசுபடுகின்றன.

பிரேசில், ஃகியானா, கானா, வெனிசுலா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் தங்கச் சுரங்க வேலைபாடுகள் பல காலமாக இயற்கைக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமேரிக்காவின் நிவாடா எனும் பகுதியில் ஒரு தங்கச் சுரங்கள் மூடப் பட்டது. சுரங்க வேலைக்காக வெளியேற்றப்பட்ட அதிகமான மெர்குரி அமிலத்தினால் அச்சுற்று வட்டாரத்தின் நீர்நிலைப்பகுதிகள் பாதிப்படைந்ததே இதற்குக் காரணம்.

மெர்குரியை தவிர்த்து மேலும் பல வேதிப்பொருட்களை தங்கச் சுரங்க வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு விசயம். 1990-ஆம் ஆண்டு முதல் 1998 வரை ஏறக்குறைய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கச் சுரங்க வேலையின் போது கானாவில் காணாமல் போய் இருக்கிறார்கள்.

கையடக்க பேசிகள் குப்பையில் தூக்கி எறியப்படுமாயின் அது மிகவும் ஆபத்தானது. அப்படி தூக்கி எறியப்படும் ஒரு கையடக்கப் பேசியானது பூமிக்குள் இருக்கும் நாப்பதாயிரம் கலன் நீரினை மாசுபடுத்தும் தன்மையைக் கொண்டதாகும்.

நமது இயற்கையை நாம் இன்னும் இவ்வளவு சூறையாடப்போகிறோம் என்பது தெரியவில்லை. புவி வெப்பம், நிலையில்லா வானிலை என அதீத மாற்றங்களில் நாம் பெரிதும் பாதிப்படைந்து வருக்கிறோம். ஆனால் அதை யாரும் பொருட்டாக கருதுவதில்லை. மறுசுழற்றி முறைகள் இவற்றில் இருந்து நம்மை சற்றே பாதுகாக்கும் என்பதில் ஐயம் இல்லை.
கையடக்க பேசிகளில் உலோகப் பொருட்கள் மட்டும் அடங்கி இருக்கவில்லை. மேலும் பல கலவைகளாலும் அவை செய்யப்பட்டிருக்கும். மறுசுழற்சி நடுவங்களில் அவற்றை குழு வாரியாக பிரித்து எடுப்பார்கள்.

உதாரணத்திற்கு இரப்பர் மற்றும் ஞெகிழி போன்றவை தனியாக சேமிக்கப்படும். பிறகு ஞெகிழிச் சுழற்சி நடுவத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவை சாலையோற கூம்புகள், உபரிபாகங்கள் போன்றவற்றை செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்.

கையடக்கப் பேசியின் பிசிபி (PCB) எனப்படும் தட்டையான பகுதி பலவகையாக பிரித்தெடுக்கப்பட்டு தூளாக்கப்படும். அந்தத் தூள்களை மின் சுத்திகரிப்பு பகுதியில் உட்செலுத்தி தங்கத்தை பிரித்தெடுப்பார்கள். பிசிபி பகுதி அகற்றப்படும் போது சில தங்கம் பூசப்பட்ட பகுதிகள் சுலபமாகவே கிடைத்துவிடுவதும் உண்டு.

இறுதியாக தங்கம் மற்றும் இதற உலோகப் பொருட்களும் அதற்கு தகுந்த இடங்களில் விற்ன்பனை செய்யப்படும். இறுதி வேலையில் இருக்கும் பொருட்கள் தரம் அளக்கப்பட்டே வெளியாக்கப்படுகிறது. பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் வகையிலும் தற்சமயம் தொழில்நுட்ப சாதனங்களும் உண்டு.

உபயோகப்படுத்த முடியாமற் போகும் கையடக்க பேசிகளும் இனி பயன் தரும் என்பதை உணர்வோமாக.

சரி அப்படி மறுசுழற்சி செய்வதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? விலை கொடுத்து வாங்கப்படும் கையடக்கப் பேசியை மறுசுழற்சிக்கு அனுப்பினால் எனக்கு சொற்பமான பணம் தானே கிடைக்கும் என நினைக்கலாம். ஆனால் அப்படி செய்யோமானால் ஏதோ ஒரு வகையில் இந்த இயற்கைக்கு நாம் நன்மை செய்ததாய் அமையும். வருங்காலத்தினருக்கும் அது பயனாக அமையும்.

மலேசியாவில் 'நோக்கிய கியோஸ்க்' (NOKIA KIOSK) எனும் தானியங்கி இயந்திரம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுதுபட்ட மற்றும் தேவையற்ற கையடக்கப் பேசிகளை இந்த இயந்திரத்தில் போட்டுவிடலாம். அப்படி போடப்படும் தொலைபேசிகளுக்கு பணம் கொடுக்கப்படாது. மாறாக நடுவதற்கு ஒரு செடி வழங்கப்படும். இது மரம் வளர்க்கும் திட்டத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியாகும்.

தொழில்நுற்பம் வளர்ந்துவிடினும் இயற்கை பாதுகாப்பு மிகக் கட்டாயமானது. அதன் விழிப்புணர்வு மக்களிடையே பின்னடைந்து இருப்பது வருத்தமான செய்தியாகும்.

Source