பொருத்தமான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வ்வொருவரும் தன்னுடைய வாழ்வில் யாரேனும் ஒருவரை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் தன்னுடைய குணம், ரசனை, எண்ணம், லட்சியம் போன்றவைகளுக்கு ஏற்ப வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். உதாரணமாக அழகை விரும்பாதவர்கள் கிடையாது. பெண்களாக இருந்தால் ஐஸ்வர்யாராய், பிபாஷா பாசு, தமன்னா, இலியானா, நயன்தாராவையோ, ஆண்களாக இருந்தால் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான், சூர்யா, மாதவன், பரத் போன்றவர்களையோ வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்கிறார்கள்.

வெளுத்தது எல்லாம் பால் அல்ல என்ற உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரின் புறத்தை மட்டமல்லாது, அகத்தையும் ஆராய்ந்த பின்னரே வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜிதேந்திரா நாக்பால் என்பவர் ஒரு வழிகாட்டியைத் தேர்ந்தெடுக்கும்போது 5 விஷயங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

* தன்னம்பிக்கை: 'ஒருவனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான கை தன்னம்பிக்கை' என்று குறிப்பிடுவார்கள். தன் மீதும், தன்னுடைய செயல்பாடுகள் மீதும் ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றி பெற முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்க நினைத்திருக்கும் நபர் தன்னம்பிக்கை உடையவரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* அறிவு: தன்னுடைய தொழில் குறித்தும், உலக விஷயங்கள் குறித்தும் அறிந்தவராக இருக்க வேண்டும். 'எனக்கு எல்லாம் தெரியும்' என சிலர் ரீல் விடுவார்கள். இதைப்போன்று 'படம் ஓட்டுபவர்களை' தேர்ந்தெடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

* தனித்தன்மை: சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடித்து, அதில் ஒருசில மாற்றங்களை மட்டும் செய்து தன்னுடையதாக விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு இல்லாமல் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு, அதன்படி நடப்பவராக இருக்க வேண்டும்.

* இரக்கம்: மற்றவரிடம் அன்பு காட்டும் குணமும், இரக்க மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் மனிதக் குணங்களில் முக்கியமானது பிறர் மீது அன்பு செலுத்துவது. எனவே, யாரிடமும் பாகுபாடு காட்டாமல் அனைவரிடமும் அன்புடன் பழகுபவராக இருக்க வேண்டும். 

* தனித்திறமை: நீங்கள் எந்தப் பாதையில் செல்ல விரும்புகிறீர்களோ, அந்தப் பாதையில் சிறந்து விளங்கும் ஒருவரையே வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் சிறந்த பாடகராக வேண்டும் என்றால் மிகச்சிறந்த பாடகர் ஒருவரை உங்களுடைய வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கலாம்.

மேற்கண்ட குணங்களைக் கொண்ட ஒருவரை நீங்கள் உங்களுடைய வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். எனவே, வழிகாட்டியைத் தேர்வு செய்யும்போது விழிப்போடு இருங்க.