குவைத் : குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார். மேலும் இவ்வொட்டகம் முஸ்லீம்களின் இறை தூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார்.
மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை (அதாங்க நம்ம ஊர் மதிப்பில் 37 கோடி) பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார். நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.
இஸ்லாமாபாத் : நம்பினால் நம்புங்கள் ஆனால் நடந்தது உண்மை தான். ஆம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானில் ஊடுறுவிய குரங்கு ஒன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனல் இத்தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து எல்லை தாண்டி பாகிஸ்தானில் ஊடுறுவிய குரங்கு பஹவல்புர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பகுதியில் நுழைந்துள்ளது.அக்குரங்கை பிடிக்க மக்கள் எடுத்த முயற்சிகள் தோற்று போனதால் காவல்துறையிடம் மக்கள் புகார் செய்தனர். பின்பு காவல்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையில் பஹவல்பூர் வனவிலங்கு துறையினர் அக்குரங்கை கைது செய்து பஹவல்பூர் மிருக்காட்சிசாலையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவிய புறா ஒன்றை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்து பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பியதாக சொல்லி ஆயுத காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.