ஹலால் உணவுகளும் E இலக்கமும்...!



ஹலால் உணவுகளும் E இலக்கமும்...!
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக ஏ.எஸ். மொஹமட் சப்ரின்)

நாட்டில் அண்மைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான பிரச்சினைகளில் பூதாகாரமாக வெடித்த ஒரு பிரச்சினையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் வழங்கப்பட்டுவந்த / வழங்கப்பட்டு வருகின்ற  ஹலால் தொடர்பான பிரச்சினையை கூறலாம். இப்பிரச்சினையை தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் பல வகையான ஹலால் தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்பட்டிருப்பதை நாம் காணலாம். எந்த அளவுக்கெனில், பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் கூட மாணவர்களின் பிழையான விடைக்கு 'இது ஹராம்' (கூடாதது/விலக்கப்பட்டது) என்று கூறும் அளவுக்கு அந்நிய மதத்திலுள்ள படித்தவர்களுக்கு  மத்தியிலும்  இப்பிரச்சினை சென்றடைந்திருக்கிறது என்பதும் அவர்கள் அது தொடர்பில் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது.

எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் எடுக்கப்பட்ட, ஏற்றுமதிப் பொருட்களுக்கு மாத்திரமே ஹலால் இலட்சினை கட்டாயம் என்ற தீர்மானத்தின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஹலால் பொருட்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பில் குழப்பநிலை காணப்படுவது தெளிவாகும். இது இவ்வாறிருக்க சமூக வலைத்தளங்களிலும் (social networks) குறுந்தகவல்கள் (SMS) மூலமாகவும் பல வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. ACJU உம் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பரிமாறப்படும் தகவல்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதுதான் E இலக்கங்கள் குறித்த செய்திகள். பல E இலக்கங்களை ஹராம் என்று அடையாளமிட்டு அவற்றை விட்டு விலகி இருக்குமாறு அறிவுரை கூறப்படுகிறது. இவற்றின் உண்மை நிலை எந்த அளவு என்பது தெரியாமலே, ஒரு நல்ல விடயத்தை செய்கிறோம் என்ற அடிப்படையிலேயே பலரும் இவற்றை பகிர்வதை நாம் பார்க்கிறோம். இவ் E இலக்கங்கள் குறித்தும் அவற்றின் உண்மை நிலை குறித்தும் சிறிது ஆராய்ந்து அதன் பின்னர் அவற்றை பகிர்வதே பொருத்தமான முறையாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாக) பேசுவது, அதிகமாக (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்கு தரவேண்டியதை) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதை) தருமாறு கோருவது, அன்னையரை புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்கு தடை விதித்து வந்தார்கள். (புஹாரி 6473).

இவ்வடிப்படையில் அண்மையில் முகப்புத்தகத்தில் (facebook) பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படமே கீழே தரப்பட்டிருக்கும் புகைப்படமாகும். அதில் கூறப்பட்டுள்ளவாறு அவை அனைத்தும் பன்றிக் கொழுப்பின், அதாவது animal triglyceride இன் அடையாளங்கள் தானா என்பது குறித்து பார்ப்போமாயின்,
முதலில், இவ் E இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு, பலரும் பல விதமான கருத்துக்களையும் காரணங்களையும்  தெரிவிக்கின்ற போதிலும் E இலக்கத்தை வழங்கும் ஏக நிறுவனமான ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணைக்குழுவின் (Europian food safety authority) உத்தியோகபூர்வ கருத்துப்படி உணவு சேர்மானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இலகுத்தன்மைக்காகவுமே இவ் E இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

E இலக்கம் வழங்கும் பொறிமுறையில் E100 தொடக்கம் E199 வரையான இலக்கம் உணவில் சேர்க்கப்படும் நிற வகைகளுக்கும் (colours) E200 தொடக்கம் E299 வரையான இலக்கம் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் (preservatives) சேர்மானங்களுக்கும் E 300 தொடக்கம் E 399 வரையான இலக்கம் ஆண்டியாக்ஸிடண்ட்கள் (antioxidants) சேர்மானங்களுக்கும் E 400 க்கு மேற்பட்ட இலக்கங்கள் மற்றைய வகை (stabilizers, emulsifiers போன்ற) சேர்மானங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

இப்போது மேலே காணப்படும் புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு E இலக்கத்தினையும் அவை எதை குறிக்கின்றது, உண்மையில் அவை பன்றிக் கொழுப்பின் அடையாளங்கள் தானா என்பதை பார்ப்போமாயின்,

E 100 :- இது செம்மஞ்சள், மஞ்சள் நிறத்தை தருவதற்காக பயன்படுத்தப்படும் curcumin என்ற நிறப்பொருளாகும். curry, processed cheese, fish fingers போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இவ் நிறப்பொருலானது மஞ்சள் தாவரத்தின் (turmeric plant) கிழங்கிலிருந்து (rhizome) பிரித்தெடுக்கப்படுகிறது.

E 110 :- மஞ்சள் நிறத்தை தரக்கூடிய sunset yellow FCF அல்லது orange yellow S எனும் நிறப்பொருளாகும். powdered soup, yoghurt, confectionary, jam போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்நிறப்பொருள் இரசாயன செய்முறை (synthetic) மூலம் பெறப்படுகிறது. 4-aminobenzene suphonic acid, hydrocholoric acid, sodium nitrite or sulphuric acid மற்றும் sodium nitrite போன்ற இரசாயனங்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்நிறம் தயாரிக்கப்படுகிறது.

E 120 :- இயற்கையான சிவப்பு நிறத்தை தரக்கூடிய cochineal அல்லது carminic acid அல்லது carmines எனப்படும் நிறப்பொருளாகும். alcohol பானங்கள்,carbonated drinks, soup, desserts போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்நிறப்பொருள் மத்திய அமெரிக்கா, ஆபிரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெருமளவில் வர்த்தகரீதியாக Dactylopidea coccus எனப்படும் ஒரு வகை பெண் வண்டின் உலர்ந்த உடல் பகுதிகளிலிருந்து alcohol ஐ அகற்றியதன் பின்னர் cochineal பெறப்படுகிறது. வியாபார ரீதியில் நிறமூட்டும் பொருளான carminic acid ஆனது அம்மோனியம்,பொட்டசியம், சோடியம் போன்ற நேர் அயான்களுடன் இணைத்து விற்பனைக்கு காணப்படுகிறது.

E140 :- பச்சை நிறத்தை தரக்கூடிய chlorophylls மற்றும் chlorophillins எனப்படும் நிறப்பொருளகும். பச்சை நிறத் தாவரங்களில் ஒளித்தொகுப்புக்கு (உணவு உற்பத்தி) பொறுப்பான பச்சையவுருவ மணியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இப்பொருளானது முழுக்க முழுக்க தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவதுடன் confectionary, jams, soups, chewing gum போன்ற உணவுப்பொருட்களில் பாவிக்கப்படுகின்றது.

E141 :- எண்ணெய் பொருட்களில் கரையக் கூடிய செம்புடன் கலந்த chlorophyll (Cu) ஆகும் (copper complexes of chlorophyll and chlorophyllins).

E153 :- vegetable carbon என்று அழைக்கப்படும் கருப்பு நிற நிறமாக்கி ஆகும். jams, fruit juices போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இப்பொருள் தாவர மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

E210 :- நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய Benzoic acid எனப்படும் preservative ஆகும். ஆய்வுகூட நிபந்தனைகளில் சோடியம் ஐதரொக்சைட், நீர், எதனோல், மற்றும் எதைல் பென்சோஏட் (ethyl benzoate) போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

E213, E214, E216 :- முறையே, நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய Calcium benzoate, ethyl p-hydroxybenzoate, propyl p-hydroxybenzoate  எனப்படுகின்ற preservatives ஆகும். இவை ஆய்வுகூட நிபந்தனைகளில் இரசாயனங்களை  பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.

E234 :- பால் உற்பத்திப் பொருட்களில் காணப்படுகின்ற Lactococcus lactis எனப்படும் பக்டீரியா இனால் உற்பத்தி செய்யப்படுகின்ற polypeptides எனப்படும் நொதியத்தை (enzyme) ஒத்த பொருளாகும். நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

E252 :- மாமிசப் பொருட்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப் படும் potassium nitrate எனப்படும் உணவுச் சேர்க்கை ஆகும். இது ஒரு ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்படும் இரசாயனப் பொருள் ஆகும்.

மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் E இலக்கங்களின் இயற்கைத் தன்மையையும் அவை பிரித்தெடுக்கப்படும் விதத்தினையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது இவை எதுவும் பன்றிக் கொழுப்பு இல்லை என்பது தெளிவாகிறது. அதிலும் E 120 எனப்படும் உணவுச் சேர்மானம் மட்டுமே ஒரு வகை வண்டிலிருந்து பெறப்படுவதும் ஏனையவை பல தாவரப் பொருட்களாகவும் இரசாயனச் சேர்க்கைகளகவும் காணப்படுகின்றது.

நாம் இவ்வகையான தகவல்களை பகிரும் போது, எம்மால் முடிந்த ஒரு நல்ல வேலையை செய்கிறோம் என்ற நோக்கில் செய்கின்ற போதும் ஒரு வதந்தியை பரப்புவது பாவமான காரியமாகும். எனவே, ஒரு விடயத்தை பகிரும் முதல் அது பற்றிய உண்மை நிலையை அறிந்த பின்னரே அதை பகிரும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுவோம்.
நன்றி jaffnamuslim.com